Saturday, March 16, 2013

பரதேசி



மலங்காட்டு தேயிலைக்கு உரமான 
தென்நாட்டு தமிழ்க்குடிகள் ..,
நூற்றாண்டு கல்லறைகள் உடைத்து 
திரைபிம்பமாய் உயிர்த்திருக்கிறார்கள் !!!

நம் மேலான இரண்டு மணி நேர 
பொழுதுபோக்கிற்காக MY LORD !!! ..,

Monday, July 16, 2012

புயலிலே ஒரு தோணி



இந்த புதினத்தை வாசிப்பதற்கான மனநிலையை, 
இன்னும் சொல்ல போனால், புயலுக்கு முன்னான ஒரு  அமைதியை . 
நூலில்  இருக்கும் ப.சிங்காரம் அவர்களை பற்றிய குறிப்புகளே உருவாக்கி தரும்.

எந்தவிதமான  சூழலில் இந்த புதினத்தை சிங்காரம் எழுதி இருக்கிறார் என்பதை அறியும் பொழுது,
அதிலும் குறிப்பாக புதினத்தை படித்து விட்டு யோசிக்கும் பொழுது , வியப்பாக இருந்தது.

யதார்த்தத்தில் மனைவியையும் குழந்தையையும்   இழந்து ,
தனிமைக்கு முழு வடிவம் கொடுத்து வாழ்ந்த ஒரு மனிதன்,
எழுத்தில் , இலக்கியத்தில் தன்னைத்தானே  மீட்டுக்கொண்டு 
புயலிலே ஒரு தோணியை படைத்து விட்டு 
 மீண்டும் அந்த தனிமையில் உறைந்து , 
மறைந்தும் போய்விட்டான் .



Tuesday, March 18, 2008

கோட்சேயின் குண்டுகள் !!!


ஹே ராம்
இதயம் தொட்டவரின்..
இதயம் தொட்டவை,
கோட்சேயின் குண்டுகள்.

பூகம்பம்
இல்லாத வழக்கமாய்,
இரண்டு முறை...
இறுதி சடங்கு.

வாலிபன்
கடற்கரையில் தனிமை..
காதலிக்காக அல்ல,
இன்னும் விற்காத சுண்டலுக்காக...

First Experience
ஒரு மழலைக்கும்    தெரியும் !!!
தடுப்பூசியின் வலியும் 
தாய்ப்பாலின் ருசியும் 

இலவசம்
கட்டணம் செலுத்தி
உறங்கிய விடுதியில்
கனவுகள்


என் பழைய ஞாபகத்திலிருந்து...,

நன்றி.

Friday, March 14, 2008

அன்பு பண்பு என்பு தண்ணீர்

என்ன தலைப்பு இது?

புரியாமல் இன்னோரு புதுகவிதையா ?
மரபிலக்கணம் செறிந்த தமிழ் உரைநடையா ?
ஆனந்த விகடனில் அடுத்து வரவிருக்கும் பிரபலத்தின் கட்டுரையா ?
இல்லை இல்லை இல்லை -- இல்லை,யுவர் ஹானர்,
சில வருடங்களுக்கு பின் வலைப்பூ உலகில் திரும்ப வந்திருக்கும் நான்
--தமிழ் பயிற்சி செய்த முதல் சில வார்த்தைகள்----

அரி நிம்பள்கி கோபம் வர்ரான்,
அரி நம்பள் ரீசன் சொல்றான்.

என்னுடைய இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பல காரணங்கள்.அதில் முதன்மையானது,
தமிழில் வலையேற்ற நான் தலையால் தண்ணீர் குடித்ததுதான்.
அது சரி,இதுக்கு முன்னால அப்படி என்ன தான் பதிவு இருக்குன்னு பாத்தீங்கன்னா,

திரும்பவும்,
நிம்பள்கி கோபம் வர்ரான்,
திரும்பவும்,
நம்பள் ரீசன் சொல்றான்.

ரீப்பீட்டு, த- வ- நா- த- த- குடித்ததுதான்.

அன்பை சொல்ல முடியாமல் தவித்த உள்ளங்களுக்கிடையே,
"அன்பு" என எழுத முடியாமல் தவித்த உள்ளம்.
பண்பை இழந்து நிற்கும் சமூகத்தில்,
"பண்பு" என பதிவிட துடித்த மனம்.
என்பு என்று எழுதியபின்,எப்படி அதை தலைப்போடு இணைப்பதுஎன்று யோசித்து,
பின், இணைக்க வேண்டும் என்று சட்டமா ?என சுயதெளிவு அடைந்த தர்க்கம்.
"தண்ணீர்" பற்றி நாம் சொல்லித்தானா, இந்த நானிலம் அறியவேண்டும் ?இருந்தாலும்,எழுதிட்டானே,ஏதாவது தேறாதா என்று என் மூளை மடிப்புகளில் தேடி,
உங்களைப் போல வெறுப்புற்ற என் அகம்.

மன்னிக்க,

சும்மா ஏதாவது எழுதி ஆரம்பிக்க ஆசை,அவ்வளவுதான்.

நன்றி

Saturday, February 26, 2005

ஆறாம் புலன்


கரையும் மெளனநொடிகளில்
அவனுக்கு அடிக்கடி கேட்பதுண்டு
அவள் யோசிக்கும் சப்தம்

ஏய் கந்தசாமி!


ஏய் கந்தசாமி,
இங்க வந்து குந்துசாமி,
இளமை என்பான் புதுமை என்பான்,
இப்பவே அனுபவிச்சுடு என்பான்
அப்படி ஒன்னு மட்டும் பண்ணிட்டியோ
நாயேம்பான் பேயேம்பான்
நாலெழுத்து படிச்சிருந்தும் இப்படி
நாலெழுத்து நோய்வந்து சாகப்போறியேம்பான்
அவனே மனசை தேத்தும்பான்
நடக்காதது நடந்துடுச்சும்பான்
நடந்தது நடந்துபோச்சும்பான்
நடக்கிறத நல்லதா பார்த்துக்கோம்பான்
நாக்கு நாலுவிதமாத்தான் பேசும்
அறிவு உனக்கு ஆரம்பத்திலிருந்து வேலை செய்யனும்
நாக்குக்கு பயந்துகிட்டு தூக்குல தொங்குறவனும்
நாய்க்கு பயந்து மரத்துல தொங்குறவனும்
ஒன்னாயிருவானா?
துக்கப்படற மனசுக்கு ஆறுதல் சொல்லிட்டு
தூக்கிகட்டின வேட்டிய இறக்கிவிடு!
போறபோக்குல பொன்னம்மாவ பார்த்தா தப்பில்ல,
ஆனா,
பொன்னம்மாவையே பார்த்திட்டிருந்தா தப்புதான், இல்ல?!

Sunday, February 20, 2005

அறிமுகம்



வணக்கம் ,

உங்களையெல்லாம் சந்திப்பதற்க்கு
அடிப்படை தமிழறிவு இருந்தால் போதும் என்றார் நண்பர் சிவா.
அது எனக்கு இருப்பதாகவும் சொன்னார்.
அதிக பிழையின்றி அவர்க்கு நான் எழுதிய கடிதங்கள் அந்த நம்பிக்கையை தந்திருக்க வேண்டும்.
இருந்தாலும் "கூட்டத்துல கட்டு சோறை அவிழ்க்கவேணாம்னு" சொன்னேன்.
அவர் கேட்கவில்லையென்று இதை படிக்கும் நேரம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்

நான் சொன்னதை அவர் கேட்டிருக்கலாம் என்று இனி படிக்கும்போதெல்லாம் உணர்வீர்கள்

அன்புடன்
குணா